பாடுகளின் பாதையிலே…

The path of suffering

தேவபிள்ளைகளான நாம் வாழக்கூடிய கிறிஸ்தவ வாழ்க்கை ஓர் பாக்கியமான வாழ்க்கை. அதே நேரத்தில் பாடுகள் நிறைந்த வாழ்க்கை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இத்தகைய பாடுகளை நாம் மட்டும்தான் அனுபவிக்கிறோம் என்று எண்ணிவிட வேண்டாம். பாடுகளை குறித்து “ஏதோ புதுமையென்று திகைக்க வேண்டாம்” என்று பேதுரு அப்போஸ்தலன் கூறுகிறார் (1 பேதுரு 4:12)

அப். பேதுரு தனது முதலாம் நிருபத்தில் பாடுகளையும், பாடுகளின் மத்தியில் விசுவாசிகளின் மனநிலை, என்பதையுமே மையப்பொருளாக வைத்து தனது நிருபத்தை தீட்டியிருக்கிறார். "பாடுகள்" என்ற சொல் இந்த நிருபத்திலே 14 முறை வருகிறது. காரணம், இந்நூலின் முக்கிய செய்தியாக பாடுகள் விவாதிக்கப்படுகிறது. ஆனால், அதைக் காட்டிலும் பல மடங்கு மகிமையும், மகிழ்ச்சியும் சொல்லப்பட்டுள்ளது. பாடுகள் நம்மை பரிசுத்த வாழ்க்கைக்கும், பரம வாழ்க்கைக்கும் பங்காளிகளாக்குகிறது.

ஆகவே, “துன்பப்பட வேண்டியது அவசியமானது” (1 பேதுரு 1:6) என எழுதுகிறார். அக்கினி சோதனையினால் பொன் ஜொலிக்கிறதுபோல, நமது விசுவாச வாழ்வும் கிறிஸ்துவின் நாளில் கனமும், மகிமையுமுள்ளதாக காணப்பட, பாடுகள் அவசியம் (1 பேதுரு 1:6,7).

இவ்விதமாக பாடுகளின் அவசியத்தை எழுதுகின்ற பேதுரு, பலவிதமான பாடுகளின் நடுவே சோர்ந்துபோயிருக்கக்கூடிய விசுவாசிகளுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணமாக “பாடுகளின் பாதையிலே நாம் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டுமென்று ஆலோசனை கொடுக்கிறார்.” நம்பிக்கையின் அப்போஸ்தலனாகிய இவரின் ஆலோசனைகள் பாடுகளின் நடுவே நம்மை ஆறுதல்படுத்தும், ஆயத்தப்படுத்தும், ஆனந்தப்படுத்தும்.

தேவபிள்ளைகளே, பாடுகளின் பாதையிலே…

(1 பேதுரு 1:13-17)

1. மனதின் அரையைக் கட்டிக்கொண்டு – ஆயத்தமாயிருங்கள். 1:13

2. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து – ஜெபம்பண்ணுங்கள். 1:13

3. பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருந்து – பொறுமையோடிருங்கள். 1:13

4. இச்சைகளின்படி நடவாதிருந்து – தேவ சித்தத்திற்கு விட்டுக்கொடுங்கள். 1:14

5. கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து – ஏற்றுக்கொள்ளுங்கள். 1:14

6. பரிசுத்தராயிருந்து – தகுதியை இழக்காதிருங்கள். 1:15

7. பயத்துடனே நடந்துகொண்டு – தேவன் உங்களை காண்கிறார் என்கிற உணர்வடையுங்கள். 1:17

“தேவன் தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.”  1 பேதுரு 5:10,11.

Leave a Reply

Your email address will not be published.